Sunday, 17 November 2013

1.34 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - அடுத்த ஆண்டு வழங்கப்படும்

16 இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய அதிநவீன ஸ்மார்ட் கார்டு 1.34 கோடி பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படுகிறது. வங்கி ஏ.டி.எம். அட்டையைப் போன்று இருக்கும் இந்த கார்டில் தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
ஸ்மார்ட் கார்டு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த அட்டையைப் பயன்படுத்தி மாணவ-மாணவிகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும்.
மாணவரின் பெயர், வண்ணப் புகைப்படம், தந்தை பெயர், வீட்டு முகவரி, படிக்கும் வகுப்பு, ரத்தப் பிரிவு, 16 இலக்க அடையாள எண், சமூகநிலை, தலைமை ஆசிரியரின் கையெழுத்து, எல்லாவற்றுக்கும் மேலாக ரகசிய குறியீடு (பார்கோடு) போன்றவை இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும்.
பெரும் வரப்பிரசாதம்
அதில் உள்ள ரகசிய குறியீட்டின் மூலம் சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் முழு விவரங்களையும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் ஒரு பள்ளியில் சேர்ந்து இடையில் படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் வேறு பள்ளியில் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் இரட்டைப்பதிவு இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் இனிமேல் தவிர்க்கப்படும்.
தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாக மற்ற பள்ளிகளில் சேருவதற்கும் இது உதவிகரமாக இருக்கும். இதில் உள்ள தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொண்டே வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
1.34 கோடி மாணவர்களுக்கு பயன்
கல்வி மேலாண்மை தகவல் திட்டத்தின் (ஈ.எம்.ஐ.எஸ்.) கீழ் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 34 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு ஸ்மார்ட் கார்டு வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுசெய்துள்ளது. இதற்காக மாணவ-மாணவிகளைப் பற்றிய தகவல்கள் சேர்ப்பு, புகைப்படம் எடுத்தல் சம்பந்தப்பட்ட பணிகள் கிட்டதட்ட 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன.
மாணவர்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பாத பள்ளிகளுக்கு இந்த மாதம் 30-ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் பெற்று அனுப்புமாறு உத்தரவிடப் பட்டுள்ளது

தேசிய அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் 27 பதக்கம் வென்ற தமிழக அணி 5-ம் இடத்தைப் பிடித்தது.

தேசிய அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் 27 பதக்கம் வென்ற தமிழக அணி 5-ம் இடத்தைப் பிடித்தது.
இப்போட்டிகள் பெங்களூரில் நடைபெற்றது. இதில் தமிழகம், ஹரியானா, ஆந்திரம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களைச் சேர்ந்த 340 மாற்றுத்திறன் வீரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலிருந்து ஆண்கள் பிரிவில் 24 பேர், பெண்கள் பிரிவில் 15 பேர் என மொத்தம் 39 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், பயிற்சியாளர் எம்.விஜயகுமார் 20 நாள்கள் பயிற்சி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து பெங்களூரில் நடைபெற்ற 13-வது தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டனர். 176 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தமிழகத்துக்கு தனி நபர் பிரிவில் 26, தொடர் போட்டியில் ஒன்று என மொத்தம் 27 பதக்கங்கள் கிடைத்தன. பதக்கம் வென்ற அணியினர் வியாழக்கிழமை தமிழகம் வந்தனர். அவர்களுக்கு விளையாட்டுத் துறை சார்பிலோ, போட்டிக்கான பயிற்சி முகாம் நடத்திய புதுவாழ்வு திட்டத் துறை சார்பிலோ வரவேற்பு அளிக்கப்படவில்லை என்பது பாராலிம்பிக் வீரர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அன்னையர்களுக்கு பாரத ரத்னா சமர்ப்பணம்: சச்சின்
































தன்னுடைய அன்னைக்கு மட்டுமின்றி, இந்தியாவில் குழதைகளுக்காகத் தன் வாழ்நாளைத் தியாகம் செய்யும் அன்னையர் அனைவருக்குமே பாரத ரத்னா விருதை சமர்ப்பிப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், முதல் முறையாக செய்தியாளர் கூட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் பேசினார். அப்போது அவர் கூறியது:
"இந்தியாவுக்காக 24 ஆண்டு காலம் விளையாடியதைப் பெரிதாக நினைக்கிறேன். அந்தக் கனவுப் பயணத்தில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உறுதுணையோடு பல சவால்களைச் சந்தித்திருக்கிறேன்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எனக்கு வேதனையைத் தரவில்லை. கிரிக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க இதுவே சரியான தருணம். இது ஒரு மகிழ்ச்சியான பயணம்.
கிரிக்கெட்தான் என் வாழ்க்கை. அதுவே எனக்கு ஆக்ஸிஜன். எனது 40 வயதில் 30 ஆண்டுகள் முழுமையாக கிரிக்கெட் விளையாடினேன். எனது 70 சதவீத வாழ்க்கையே கிரிக்கெட்தான். எனவே, தொடர்ந்து கிரிக்கெட்டுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பேன். ஓய்வு பெற்று 24 மணி நேரம்தான் ஆவதால், அதுகுறித்த எதிர்காலத் திட்டத்தை உடனே சொல்ல இயலாது.
இந்த 24 ஆண்டு காலத்தில் ஏகப்பட்ட காயங்களை எதிர்கொண்டுள்ளேன். அதில் இருந்து மீண்டுள்ளேன். இந்தச் சுமை போதும் என்று உடம்பு தெரிவிக்கிறது. உடம்புக்கு ஓய்வு தேவை. இந்த உடம்பால் தொடர்ந்து பாரத்தைச் சுமக்க முடியாது.
நான் மைதானத்தில் விளையாடுவதை என் அம்மா நேரடியாகப் பார்த்ததே இல்லை. அதற்கு வாய்ப்பாக இருக்கட்டும் என்றுதான் மும்பையில் கடைசி போட்டி நடக்க வேண்டும் என்று கோரினேன். அதை பிசிசிஐ ஏற்றது.
உடலளவில் இந்தியாவுக்காக இனி விளையாடாமல் போனாலும்கூட, மனதளவில் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருப்பேன்.
இந்த விருதை (பாரத ரத்னா) என் அன்னைக்கு சமர்ப்பிப்பதாக நேற்று சொன்னேன். ஏனெனில், எனக்காக அவர் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். ஒரு குழந்தையால் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியாது. வளரும்போதுதான் எல்லாம் தெரியவரும். என் தாய் மட்டுமல்ல... இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான அன்னையர்கள் தங்கள் குழந்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்கின்றனர். அவர்களுடனும் இந்த விருதை பகிர விரும்புகிறேன்.
பாரத ரத்னா விருது கிடைத்ததை மிகவும் பெருமிதமாகக் கருதுகிறேன். இந்த விருது, ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது. இந்த நேரத்தில், பேராசிரியர் சின்.என்.ஆர். ராவுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். அவருடன் பாரத ரத்னா விருதை வாங்குவது பெருமையாக இருக்கிறது. அறிவியலில் அவரது பங்களிப்பு மிகப் பெரியது" என்றார் சச்சின் டெண்டுல்கர்.






சச்சின் - நெகிழ்ச்சி ததும்பும் நினைவுகள்

‘உலகில் வேறு யாருக்கும் இதுபோன்ற பிரிவு உபசார விழா நடந்ததாகத் தெரியவில்லை’’ என்றார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி.
முதுகெலும்பற்ற மட்டை வீச்சின் மூலம் இந்த டெஸ்ட் தொடரைப் பாதியாகக் குறைத்துவிட்ட மேற்கிந்திய அணியினர் தங்கள் வாழ்நாளில் காணவியலாத காட்சியை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரது உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்தது சமியின் வார்த்தை.
கண்ணீரின் தருணம்
சத்தியமான வார்த்தை அது. ஸ்டீவ் வா, பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங் என யாருக்கும் கிடைத்திராத பேறு இது. இந்தியாவின் தவப்புதல்வன் என்று சொல்லத் தகுந்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், தான் மிகவும் நேசித்த கிரிக்கெட் மைதானத்தை விட்டு விடைபெறும் காட்சியைப் பார்த்தபோது கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதே ஒரு கணம் மறந்துபோனது. கண்களைத் துடைத்துக்கொள்ளாத கரங்களைப் பார்ப்பது அரிதாக இருந்த அபூர்வமான தருணம் அது. மும்பை வான்கடே அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் இரு அணியின் ஆட்டக்காரர்களும் முன்னாள் ஆட்டக்காரர்களும் வர்ணனையாளர்களும் டெண்டுல்கரின் குடும்பத்தினரும் இதர உறவினர்களும் நண்பர்களும் ஆட்டத்தின் நிர்வாகிகளும் நெகிழ்ந்து நின்ற நேரம் அது. மகத்தான சாதனைகளைப் புரிந்த சுவடுகூடத் தெரியாத அடக்கத்துடன் தன் அசாத்தியமான பயணத்திற்கு உதவிய அனைவருக்கும் சச்சின் ஆத்மார்த்தமாக நன்றி தெரிவித்தபோது அரங்கமே அழுதது.
ஆகச்சிறந்த பார்ட்னர்ஷிப்
பதினோரு வயதில் தனக்குச் சுதந்திரம் அளித்த தன் தந்தையை நினைவுகூர்ந்த சச்சின், “நான் ஒவ்வொரு முறை ஏதேனும் ஒரு மைல்கல்லைத் தொடும்போதும் மட்டையை உயர்த்துவேன். அது என் தந்தைக்காக” என்றார். தன் தாய்க்கு மட்டுமின்றித் தன் ஆசிரியர்களுக்கும் நன்றி சொன்ன சச்சினின் பண்பு அனைவரது மனங்களையும் தொட்டது. சச்சின் தன் மனைவியைப் பற்றிப் பேசும்போது “அஞ்சலியின் ஒத்துழைப்பும் ஊக்கமும் இல்லாமல் என்னால் இந்த அளவுக்கு சாதித்திருக்க முடியாது” என்றார். ‘‘என் வாழ்வின் ஆகச்சிறந்த பார்ட்னர்ஷிப் அஞ்சலியுடனான பார்ட்னர்ஷிப்’’ என்று அவர் நெகிழ்ந்தபோது அஞ்சலியின் கண்கள் குளமாயின. தன் வாழ்வின் மதிப்பு வாய்ந்த வைரங்களாகத் தான் கருதும் தன் குழந்தைகளுடன் போதிய அளவு தன்னால் நேரம் செலவிட முடியவில்லை என்று சொல்லி அதற்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார். திராவிட், கங்குலி, கும்ப்ளே போன்ற சகாக்களுக்கும் நன்றி கூறினார். சிறந்த ஆட்டக்காரராக மட்டுமின்றி சிறந்த மகனாக, கணவனாக, மாணவனாக, தந்தையாக, சகாவாக சச்சின் விளங்குவதையும் அவர் பேச்சு காட்டியது. “நீ திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது, நல்ல மனிதனாகவும் இருக்க வேண்டும்” என்று தன் தந்தை சொன்னபடி வாழ்ந்துவரும் சச்சினின் பண்பை உணர்த்திய பேச்சு அது.
தாங்க முடியாத பிரிவு
ரசிகர்களைப் பற்றிப் பேசும்போதும் அளப்பரிய அவர்களது அன்பு அவரை ஒவ்வொரு கணமும் நெகிழவைப்பதை உணர முடிந்தது. “நான் பூஜ்யம் அடித்தாலும் சதம் அடித்தாலும் என் மீது ஒரே விதமான அன்பு செலுத்தும் உங்களுக்கு நன்றி” என்று சொன்ன அவர் சச்சின், சச்சின் என்று ரசிகர்கள் போடும் கோஷம் இறுதி மூச்சுவரை தன் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றபோது பல ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வழிவதைக் காண முடிந்தது. பத்திரிகையாளர்கள் பிரிவில் அமர்ந்திருந்தவர்களும் நெகிழ்ச்சியின் பிடியில் இருந்தார்கள். உணவின்போது அனைவரது பேச்சும் “இனி இப்படி ஒரு ஆட்டக்காரரை எப்படிப் பார்க்க முடியும்” என்பதைப் பற்றியதாகவே இருந்தது. மைதானத்தை விட்டு சச்சின் பிரிவதை ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட இழப்பாகவே கருதியதை உணர முடிந்தது.
நன்றி செலுத்துதல்
உணர்ச்சிகரமான பேச்சை முடிக்க முடியாமல் முடித்துக்கொண்டு பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் நினைவுப் பரிசுகளை வாங்கிக்கொண்டு மைதானத்தைச் சுற்றிவந்த சச்சின், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். சிறிது தூரம் அவர் நடப்பதற்குள் அவருக்கு இரு புறமும் வந்து நின்ற விராட் கோலியும் மகேந்திர சிங் தோனியும் அவரைத் தோளில் தூக்கிவைத்துக்கொண்டார்கள். கையில் தேசியக் கொடியுடனும் கண்ணீரை மறைக்கும் சிரிப்புடனும் இந்திய கிரிக்கெட்டின் ஓய்வு பெறும் நட்சத்திரம், இன்றைய நம்பிக்கை நட்சத்திரங்களின் தோள்களில் அமர்ந்தபடி பவனிவந்தது. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைச் சுமந்திருக்கும் இவர்கள் இருவரும் தங்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் வழிகாட்டுதலும் தந்த நாயகனுக்கு நன்றி செலுத்துவதன் குறியீடாக அமைந்தது இந்த நிகழ்வு.
விடைகொடுத்த மைதானம்
முதல் இன்னிங்ஸில் ஆட மைதானத்துக்குள் நுழைந்தபோது மைதானத்தைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு மைதானத்துக்குள் சச்சின் பிரவேசித்தபோது பலரும் ஆச்சரியமடைந்தார்கள். அடுத்த இன்னிங்ஸ் ஆட வாய்ப்புக் கிடைக்காமல்போகலாம் என்பதை உணர்ந்த அனுபவசாலியின் செயலாகவே அது அமைந்தது. இதே மைதானத்தில்தான் அவரது முதல் தர ஆட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதே மைதானத்தில்தான் அவரது மகத்தான கனவாகிய உலகக் கோப்பையைக் கையில் ஏந்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதே மைதானத்தில் பல சாதனைகளைப் புரிந்த சச்சின் தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதி நாளன்று மைதானத்தைத் தொட்டுக் கும்பிட்டு விடைபெற்றார் .
கடினமான கேட்சைப் பிடித்து சச்சினின் கடைசி டெஸ்டில் சதமெடுக்கும் வாய்ப்பை மறுத்த சமி அதே வேகத்தை மட்டை வீச்சிலும் காட்டியிருந்தால் போட்டி இன்னும் ஒரு நாள் நீடித்திருக்கும். முதல் போட்டியில் மூன்று நாட்கள் தாக்குப்பிடித்த மே.இ. தீவுகள் அணி, இரண்டாம் போட்டியில் உணவு இடைவேளைக்குள் சுருண்டது. ஐந்து நாட்களும் தங்கள் மனம் கவர்ந்த நாயகனைப் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆட்டம் முடிந்து இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆகியும் பலர் அரங்கை விட்டுச் செல்ல மனமின்றி நின்றுகொண்டிருந்தனர். பெரும் எதிர்பார்ப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தொடர் இப்படிப் பாதியில் முடிந்தது குறித்து உங்களுக்கு வருத்தம் இருக்கிறதா என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊடக மேலாளர் தேவேந்திர பூபதியைக் கேட்டதற்கு, “அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இரண்டு அணிகள் ஆடும் ஆட்டத்தின் தரத்தைப் பொறுத்த விஷயம் அது” என்று பதில் சொன்னார். சச்சின் விடைபெறுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “ஈடு செய்ய முடியாத இழப்பு இது. இந்தக் காட்சியைப் பாருங்கள். இப்படிப்பட்ட ஒரு உணர்ச்சியை எங்கே பார்க்க முடியும்?” என்று அவர் சொன்னது மைதானத்தில் இருந்த அனைவரது உணர்ச்சிகளின் சாரமாக வெளிப்பட்டது.
சச்சின்ன்ன்ன்... சச்சின்ன்ன்ன்...
ஒவ்வொரு விக்கெட்டாக விழுந்து கொண்டிருந்தபோது ரசிகர்களின் ஆரவாரம் மேலும் மேலும் உச்ச ஸ்தாயியை எட்டிக்கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் சச்சினை மைதானத்தில் பார்க்க முடியாதா என்ற ஏக்கம் ரசிகர்களின் உணர்ச்சிகளில் வெளிப்பட்டது. சச்சின் நின்றிருந்த இடத்துக்கு அருகில் இருந்தவர்களிடம் இருந்து ‘‘சச்சின்ன்ன்ன்ன், சச்சின்ன்ன்’’ என்னும் மந்திர உச்சாடனத்தின் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் கூடியபடி இருந்தது. உணவு இடைவேளைக்கு இருபது நிமிடம் இருக்கும்போது பிரக்யன் ஓஜாவின் ஓவர் முடிந்தது. உடனே ரசிகர்கள் அனைவரும் கேப்டனுக்குத் தலைவர்களாக மாறி “வீ வாண்ட் சச்சின்” என்று கோஷமிடத் தொடங்கினார்கள். போட்டி கைக்கு வந்து விட்ட நிலையில் புன்னகையுடன் இதை யெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தோனி சச்சினைப் பந்து வீச அழைத்தார். ரசிகர் களின் உற்சாகம் கரைகடந்தது. சச்சினின் பந்து மட்டையாளரின் கால் காப்பில் பட்டதும் மைதானத்தில் இருந்த 11 பேருடன் அரங்கில் இருந்த ஆயிரக் கணக்கான ரசிகர்களும் சேர்ந்து அப்பீல் செய்தார்கள். நடுவர் அசைந்துகொடுக்க வில்லை என்பது வேறு விஷயம்.
இனி...
இனி எந்த அணித்தலைவருக்கும் ரசிகர்கள் இப்படி யோசனை சொல்ல மாட்டார்கள். இனி எந்த ரசிகரும் நடுவரிடம் அப்பீல் செய்ய மாட்டார். இனி யாருடைய பிரவேசத்துக்கும் மைதானம் அதிரும் கரகோஷம் கேட்காது. இனி யார் ஆட்டம் இழக்கும்போதும் மயான அமைதி சூழாது. கிரிக்கெட் இனி உணர்ச்சி வேகம் தணிந்த நிலையில் ஆடப்படலாம். ஆனால் கிரிக்கெட் ஆடப்படும் விதத்தையும் அதன் எல்லைகளையும் மாற்றி எழுதியவரின் தடம், கிரிக்கெட் ஆடப்படும் ஒவ்வொரு மைதானத்திலும் உணரப்படும். இவரது சாதனைகள் பிறருக்கான லட்சியப் புள்ளிகளாக விளங்கும். இந்தியாவாலும் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதைச் செயலில் காட்டியவரின் கடைசித் தொடர் அந்த ஆதிக்கத்தின் அழுத்தமான குறியீடாக அமைந்தது அந்தச் சாதனையாளருக்குப் பொருத்தமான பிரியாவிடைதான்.





சச்சின் - தேசத்தின் எதிர்பார்ப்பைச் சுமந்தவர்

சச்சின் தன் வாழ்நாளின் இறுதி சர்வதேச ஆட்டத்தில், இறுதி இன்னிங்ஸ் பேட்டிங்கை விளையாடி முடித்துவிட்டார். அந்த இன்னிங்ஸில் அவர் சதம் அடித்திருக்கலாம். ஆனால், 74 ரன்களில் அவரது இன்னிங்ஸ் முடிந்துவிட்டது. சச்சின் தன் 200-வது டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு சதமடித்து தன் கிரிக்கெட் வாழ்க்கையைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்ற அவரது ரசிகர்களின் கனவு நிறைவேறப்போவதில்லை.
சச்சினின் சாதனைகள் என்று பட்டியலிட்டு, அவர்தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனா என்று பட்டிமன்றங்கள் நடத்தலாம். சிலர் அவரவருக்குப் பிடித்தமான பேட்ஸ்மேன்களை முன்வைத்து, சச்சினை மட்டம்தட்டவும் செய்யலாம். எவ்வளவோ ஆட்டங்களில் சச்சின் இன்னமும் கொஞ்சம் முனைப்புக் காட்டியிருந்தாரானால், இந்தியா மேலும் பல ஆட்டங்களை வென்றிருக்கலாம் என்று விமர்சனம் செய்யலாம். அவரை சுயநலக்காரர் என்றும் திட்டலாம்.
ஆனால், இந்திய கிரிக்கெட்டுக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவர் ஆற்றியுள்ள தொண்டினை யாராலும் கேள்விக்கு உட்படுத்த முடியாது.
சச்சின் கொடுத்த நம்பிக்கை
சச்சின் விளையாடத் தொடங்குவதற்கு முன்னும் இந்தியாவுக்காகத் திறம் வாய்ந்த பல வீரர்கள் பேட்டிங்கில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். அதிரடியான விளையாட்டு, சதம் அடித்தல், விக்கெட்டை விட்டுக்கொடுக்காத திறத்தால் இந்தியாவைத் தோல்வியிலிருந்து காத்தல் என்று ஏதோ ஒரு விதத்தில் இந்திய கிரிக்கெட்டுக்குப் பங்களித்திருக்கிறார்கள். ஆனால், சச்சின்தான் முதல்முறையாக, எந்த எதிரணியாக இருந்தாலும், தன் தனியொரு சாமர்த்தியத்தினால் மட்டுமே இந்தியாவை வெற்றிபெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தார்.
ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘மணற்புயல்’ஆட்டங்களில் மட்டுமின்றி, பல ஆட்டங்களிலும் சச்சின் இதனை நிரூபித்தார். அதன் பின், இந்தியா வெல்ல முடியாத நிலையி லும்கூட, சச்சின் ஆட்டமிழக்காமல் இருக்கிறார் என்பதனாலேயே இந்தியாவால் வெல்ல முடியும் என்று ரசிகர்கள் நம்பினர். அணியில் விளையாடிய பிற இந்திய வீரர்களும்கூட அவ்வாறே நம்பிக்கொண்டிருந்தனர். தன் அணியின் வீரர்களுக்கும், நூறு கோடி இந்தியர்களுக்கும் ஒருசேர நம்பிக்கை அளித்த ஒரே மனிதராக சச்சின் இருந்தார்.
இந்திய கிரிக்கெட்டை விடப் பெரிதாக… மொழி யால், மதத்தால் பிரிந்து கிடக்கும் இந்தியர்களைத் தன் விளையாட்டால் சச்சின் ஒன்றுசேர்த்தார். அவர் ஆடு களத்துக்கு பேட்டிங் செய்ய வந்துவிட்டார் என்றால், தொலைக்காட்சி அலைவரிசைகளை மக்கள் மாற்றிக்கொண்டனர். தெருக்களில் போக்குவரத்து குறைந்தது. அவர் பேட்டிங் செய்யும்போது திருடர்கள் தாராளமாகக் குற்றச்செயல்களில் ஈடுபடலாம் என்று நகைச்சுவைத் துணுக்குகள் வெளியாகின. டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் இன்று பேட்டிங் செய்யப்போகிறார் என்பது தெரியவரும் போதெல்லாம், கூட்டம் அதிகரித்தது. ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டார் என்றவுடனேயே மக்கள் சாரிசாரியாக மைதானத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினர். தொலைக்காட்சி யில் பார்ப்போரும் மீண்டும் அலைவரிசைகளை மாற்றிக்கொண்டனர். இப்படியாக, சச்சின் என்ற இளம் ஆட்டக்காரர் கொஞ்சம்கொஞ்சமாக இந்திய கிரிக்கெட்டைக் கீழே தள்ளி, அதைவிட அவர் மேலெழ ஆரம்பித்தார். மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்ட சினிமா நாயகர்கள் அனைவரையும் முழுவதுமாகப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒற்றை நபராக ஆனார்.
இவ்வாறு ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் அவரிடம் இயற்கையிலேயே இருந்தன. அதனால்தான், தன் 16 வயதிலே அவரால் டெஸ்ட் ஆட்டத்தில் ஆட முடிந்தது. அவருடைய உயரம் குறைவானதாக இருந்தது. ஆனால், கிரிக்கெட்டைப் பொருத்தமட்டில் இது ஒரு குறைபாடே அல்ல. தடுத்தாடும் ஆட்டத்தில் இருந்த மிகச் சில பலவீனங்களைத் தவிர்த்து, சச்சினின் ஆட்டத்தில் குறை என்பதைக் காண முடியவில்லை. ஒவ்வொரு பந்தையும் அவர் 10 விதமாக அடிக்கும் திறன் பெற்றிருந்தார். பிராட்மனே சச்சினின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டுத் தன் மனைவியிடம், இந்தப் பையனின் ஆட்டம் என் ஆட்டத்தை நினைவுபடுத்துகிறது என்று சொல்லியிருக்கிறார்.
வெற்றிபெறும் தேசத்தின் குறியீடு
ஆனால், ஆட்டத் திறமை மட்டுமே சச்சினை இந்த உயரத்துக்குக் கொண்டுசெல்லவில்லை. இந்திய மனநிலை என்பது தோல்வியை, துயரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவும், எல்லாம் விதி என்று ஏற்றுக்கொண்டு போகக்கூடிய ஒன்றாகவும் இருந்தது. மக்கள்தொகையின் பளுவினால் அழுத்தப்பட்டு, தொய்ந்து, ஏழ்மையிலும் நோயிலும் அல்லல்பட்டுக்கொண்டிருந்த ஒரு சமுதாயமாக இருந்தது. அரசியலும் பொருளாதாரமும் ஒரு திருப்புமுனையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 1980-களின் இறுதியில் சச்சின் ஆட வந்தார். எப்படியாவது ஆட்டத்தை வெல்ல வேண்டும் என்ற தன் உடல்மொழியால் பெரும்பாலான இந்தியர்களைக் கவர்ந்தார். விதியைக் கண்டு பயப்பட வேண்டாம், முயற்சி ஒன்று மட்டுமே போதும், வெற்றி பெறுவது சாத்தியமே என்ற நம்பிக்கையை அவர் பெரும்பாலான இந்தியர்களுக்குள் விதைத்தார்.
2000-வது ஆண்டைத் தாண்டி, புத்தாயிர ஆண்டுகளுக்குள் இந்தியா நுழைந்தபோது அரசியல், பொருளாதாரம் இரண்டிலும் இந்தியா நிலைத்தன்மையை அடைந்திருந்தது. இந்தியா ஒரு தோல்வியுற்ற தேசமல்ல, உலக அரங்கில் ஒரு முக்கியமான தேசமாக இருக்கப்போகிறது என்பதை முடிவுசெய்த அந்த 10 ஆண்டுகளில்தான் இந்தியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக சச்சின் ஆனார். தோல்வியிலிருந்து நிமிர்ந்து எழுந்துகொண்டிருக்கும், இனி என்றென்றைக்கும் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கப்போகிற ஒரு தேசத்தின் குறியீடாக அவரைப் பல இந்தியர்களும் கண்டதில் வியப்பு ஒன்றும் இல்லை.
அதற்கடுத்த 10 ஆண்டுகளில் சதங்களையும் சாதனைகளையும் சச்சின் குவித்தார். அணித் தலைவராக அவர் சாதித்தது மிகக் குறைவு என்றாலும் கங்குலி, கும்ப்ளே, திராவிட், தோனி போன்ற அணித் தலைவர்களுக்கு மிகவும் வலுசேர்த்தார்.
நாயகர்களின் இடம்
சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர், ஓய்வுபெற்றிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் வலுக்கத் தொடங்கின. இதுவும்கூட மாற்றமடைந்துள்ள இந்தியப் பொருளாதாரத்தின், சமூகத்தின் ஒரு கூறுதான். இனி, பழைய நாயகர்களுக்கு இங்கு நிரந்தர இடம் கிடையாது. புதிய இளைஞர்கள், புதிய சாதனைகள் படைப்பவர்களுக்குத்தான் இனி இடம்.
சச்சின் போன்ற திறமையுள்ள ஓர் ஆட்டக்காரருக்கு, உள்ளம் நினைப்பதுபோல உடலால் செயல்பட முடியவில்லை என்பது புரிபட, சில காலம் ஆனது. கிரிக்கெட் என்பது இளைஞர்கள் ஆட்டம். அதன் வடிவமும் அமைப்பும் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கக் கூடியது.
திராவிட், கும்ப்ளே போன்றோர் தாம் உச்சத்தில் இருந்தபோதே ஓய்வுபெற்றார்கள். அதேபோல, சச்சினும் சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாததால் அவரது பங்களிப்பு எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை. அவர் அடித்த சதங்களைக் கொண்டோ, எடுத்த ஒட்டுமொத்த ஓட்டங்களைக் கொண்டோ, அல்லது எத்தனை ஆட்டங்களை இந்தியாவுக்காக வென்றார் என்பதைக் கொண்டோ சச்சினின் பங்களிப்பை அளவிட முடியாது. ஏனெனில், அவரது பங்களிப்பு அவற்றையெல்லாம்விடப் பெரியது.
சச்சின் விளையாடுவதைப் பார்த்துதான் நான் கிரிக்கெட் விளையாடவே முடிவுசெய்தேன் என்றார் சேவாக். அவர் மட்டுமல்ல, அவருக்குப் பின் இன்றுவரை இந்தியாவுக்காக விளையாட வந்திருக்கும் அனைத்து வீரர்களும் இதையே உறுதிப்படுத்துவார்கள். தனக்கடுத்த கிரிக்கெட் தலைமுறையின் கனவுகளை, ஆட்ட பாணியை, கிரிக்கெட் ஆட்டத்தை அணுகும் மனநிலையை முழுவதுமாக வடிவமைத்த பெருமை சச்சினுக்கு மட்டுமே உண்டு. இதுதான் அவரது பங்களிப்பு. இதுதான் அவரது பெருமை.
இந்த நேரத்தில் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவித்திருக்கும் செய்தி மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.


24 ஆண்டுகளாக என் நெடிய, சிறப்பான பயணத்தில் என்னுடன் விளையாடியுள்ள பல மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கும் பள்ளிப்பருவத்தில் நான் பிரமிப்புடன் பார்த்து வளர்ந்த மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்

சர்வதேச கிரிக்கெட்டில் தன் வாழ்நாளின் இறுதிநாள் ஆட்டத்தை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடினார் சச்சின் டெண்டுல்கர். மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றதற்குச் சற்று நேரத்திற்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிமயமான இறுதி உரையுடன் சச்சின் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார்.
“நண்பர்களே! சற்று அமைதி காத்து என்னைப் பேச விடுங்கள்; இல்லையென்றால் நான் மேலும் உணர்ச்சிவயப்பட நேரிடும் (ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளக்கிறது). 22 கஜங்கள் மற்றும் 24 ஆண்டுகளுக்கிடையிலான என் அற்புதமான (கிரிக்கெட்) வாழ்க்கை இன்று முடிவுக்கு வந்து விட்டது என்று நம்புவது கடினமாகத்தான் இருக்கிறது; இத்தருணத்தில் என் வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றியவர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். மேலும், அனைவரது பெயர்களையும் நான் மறந்துவிடக் கூடாது என்பதற்காக வாழ்க்கையில் முதன்முறையாகக் கையில் ஒரு பட்டியலையும் கொண்டுவந்துள்ளேன். உணர்ச்சிகள் என்னைப் பேச விடாமல் தடுத்தாலும் அதையும் மீறி இப்போது நான் பேச வந்துள்ளேன்.
தந்தையை புகழ்ந்த சச்சின்
என் வாழ்க்கையிலேயே மிக முக்கிய மனிதராகிய என் தந்தை 1999ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். அவரது இழப்பை என்னால் தாங்கவே முடியவில்லை. இன்று நான் உங்கள் முன் நின்று இவ்வாறு உரையாற்றுவதற்கு அவரது வழிநடத்துதல்தான் காரணம். எனக்கு 11 வயது ஆகும்போதே, 'நீ விரும்பியதைக் குறுக்குவழியில் செல்லாமல் நேர்வழியில் சென்று அடைய வேண்டும்' என்று அவர் அனுமதியளித்தார். அவர் சொன்னது போல் நல்வழியில் நடந்தேன்; இனிமேலும் அதுபோலவே இருப்பேன். ஏதாவது ஒரு சாதனையைச் செய்தபின் நான் என் பேட்டை உயரத் தூக்கியபோதெல்லாம் அதை அவருக்காகவே தூக்கிப் பிடித்தேன்.
தாயின் பிரார்த்தனை
என்னை மாதிரி ஒரு குறும்புக்கார மகனை எப்படி வளர்த்தார் என்பது என் தாய்க்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். தன் மகன் ஆரோக்கியமாகவும் எவ்விதக் குறைபாடுமின்றியும் இருக்க வேண்டும் என்பதுதான் எந்த ஒரு தாயின் வேண்டுதலாகவும் இருக்கும். என்னைப் பற்றியும் என் உடல்நலம் பற்றியும் மிகவும் கவலைப்படுவது என் தாய்தான். கடந்த 24 ஆண்டுகளாக நாட்டுக்காக நான் ஆடியபோது என்னைக் கவனித்துக் கொண்டது அவர்தான்; அதற்கு முன்பிருந்தே நான் ஆடும்போதெல்லாம் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பது அவரது வழக்கம். அவரது பிரார்த்தனைகளின் மூலம் எனக்குக் கிடைத்த தெம்பினால்தான் இத்தனை நாள் என்னால் விளையாட முடிந்தது; அவரது தியாகங்களுக்கெல்லாம் மிகப்பெரிய நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
பள்ளி நாட்களின்போது நான் என் அத்தை வீட்டில் தங்கிப் படித்தேன். நீண்ட நேரம் விளையாடி விட்டு வந்து நான் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது என்னை எழுப்பி மறுநாள் விளையாடத் தெம்பு வேண்டுமென்பதற்காக எனக்கு அவர் சோறூட்டுவார். அதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது. இன்று வரை என்னை ஒரு மகனாகவே அவர் பாவிக்கிறார்.
அண்ணனின் அர்ப்பணிப்பு
அவ்வளவாகப் பேசாத என் அண்ணன் நிதின், 'எதைச் செய்தாலும் 100% அர்ப்பணிப்புடன் செய்' என்று எனக்கு அறிவுரை கூறுவார். என் முதல் பேட்டை எனக்குப் பரிசளித்த என் அக்கா சவிதாவும் அண்ணனும் கொடுத்த ஊக்கம் அளவில்லாதது. நான் விளையாடும்போதெல்லாம் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்யும் பலரில் சவிதாவும் ஒருவர்.
இன்னொரு அண்ணன் அஜித் எனக்காகவே வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்து என்னுடன் இந்தக் கனவு வாழ்க்கையில் கூடவே பயணித்திருக்கிறார். என் குரு அச்ரேகர் அவர்களிடம் 11 வயதில் என்னை அஜித் கூட்டிக் கொண்டு போனவுடன் என் வாழ்க்கையே மாறத் தொடங்கியது. மீண்டுமொரு முறை என்னால் பேட்டிங் செய்ய முடியாது என்று தெரிந்திருந்த போதிலும் நேற்று நான் அவுட்டானதைப் பற்றி நேற்றிரவும் நாங்கள் விவாதித்தோம்; இத்தகைய விவாதம் நான் ஓய்வு பெற்ற பின்னரும் தொடரும் என்று நான் நினைக்கிறேன். என் பேட்டிங் ஸ்டைல் பற்றி அவருடன் விவாதித்திருக்காவிடில் நான் பல சாதனைகளைச் செய்திருக்க மாட்டேன்.
அஞ்சலியின் தியாகம்
என் வருங்கால மனைவி அஞ்சலியை 1990-ல் சந்தித்ததை என் வாழ்க்கையிலேயே அழகான தருணம் என்று நான் கூறுவேன். டாக்டராகிய அஞ்சலி திருமணத்திற்குப் பின் என் கிரிக்கெட் வாழ்க்கைக்காகவும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளவும் தன் டாக்டர் தொழிலுக்கே முழுக்குப் போட்டுவிட்டார். அஞ்சலியின் தியாகத்தினால்தான் என்னால் கிரிக்கெட்டில் முழுக்கவனம் செலுத்த முடிந்தது. எனது அனைத்து விருப்பு வெறுப்புக்களையும் தாங்கி, என் வெற்றி தோல்விகளின்போது என் கூடவே இருந்து துணை நின்ற, நிற்கப்போகும் அஞ்சலிக்கு என் நன்றி. என் வாழ்வின் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் அஞ்சலியுடன் அமைந்த பார்ட்னர்ஷிப்தான் (சச்சின் பேசும்போது அஞ்சலியால் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை).
16 வயதாகும் என் மகள் சாராவும், 14 வயதாகும் என் மகன் அர்ஜுனும் விலைமதிப்பற்ற என் இரு வைரங்கள் . பலமுறை அவர்களது பிறந்த நாள், பள்ளி ஆண்டு விழா நாட்களின் போதெல்லாம் என்னால் அவர்களுடன் இருக்க முடிந்ததில்லை; இதுவரை என் செல்வங்களுடன் நான் அதிக நேரம் செலவழிக்கவில்லை என்றாலும், இனி வரும் காலம் முழுதும் அவர்களுடன் இருந்து அவர்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதே என் தலையாய கடமை (சாரா, அர்ஜுன் இருவரது கண்களிலும் கண்ணீர் பொங்குகிறது).
மாமனார்-மாமியாராகிய ஆனந்த் மேத்தா, அன்னபெல் ஆகிய இருவரும் மிகவும் உறுதுணையாக இருந்ததுடன் அக்கறையும் காட்டிவருகின்றனர். நம்மை வழிநடத்த வலுவான ஒரு குடும்பம் இருப்பது மிக அவசியம் என்று நான் கருதுகிறேன். அஞ்சலியைத் திருமணம் செய்ய அனுமதி அளித்ததற்கு அவர்களிருவருக்கும் என் நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளி நாட்களிலும் நாட்டுக்காக விளையாடிய இந்த 24 ஆண்டுகளிலும் எனக்கு நண்பர்கள் அதிகம். அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் என் வாழ்க்கையில் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்துள்ளது. நண்பர்களுடன் பழகிய நாட்களை நான் என்றுமே மறக்க மாட்டேன். அவர்கள் என்னுடன் இருந்திருக்காவிட்டால் என் வாழ்க்கை ஒருபோதும் முழுமையடைந்திருக்காது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
குருவுக்கு நன்றி
11, 12 வயதில் குரு அச்ரேகர் அவர்கள் என்னை அவருடைய வண்டியில் மும்பையில் இருக்கும் சிவாஜி பார்க், ஆசாத் மைதானம் உள்ளிட்ட பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று விளையாட வைப்பார். இப்போது அவர் இங்கு அமர்ந்திருப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. நான் விளையாடும்போதெல்லாம் ஒரு மேட்ச் விடாமல் அவர் தொலைக்காட்சியில் பார்ப்பார் என்று எனக்குத் தெரியும். கடந்த 29 ஆண்டுகளில் ஒரு முறை கூட 'நன்றாக விளையாடினாய்' என்று அவர் என்னைப் பாராட்டியதில்லை (சிரிக்கிறார்); ஏனெனில் அவ்வாறு சொன்னால் ஒரு வேளை அடுத்த முறை நான் சரியாக விளையாமல் போய்விடுவேனோ என்று அவருக்குள் ஒரு பயம். இப்போது அவர் முழு மனதுடன் எனக்கு வாழ்த்துக் கூறுவார் என்று நினைக்கிறேன்; இனி என் வாழ்வில் கிரிக்கெட்டை நான் பார்க்க மட்டும்தான் செய்வேனே தவிர விளையாட மாட்டேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத பங்காற்றியதற்காக என் குருவுக்கு மீண்டுமொரு முறை என் நன்றிகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
16 வயதிலேயே என் திறமையை மதித்து என்னை நாட்டுக்காக ஆடுவதற்குத் தேர்ந்தெடுத்தற்காக பி.சி.சி.ஐ.க்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்காக ஆடும் கனவை நான் இன்று வரை என் நெஞ்சுக்குள் வைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் பிரிவுபசார உரையை இந்த அளவுக்கு சுதந்திரமாக பேசும்படி எனக்கு அனுமதி அளித்ததற்காக கிரிக்கெட் வாரியத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். நான் அடிபட்டு ஓய்வெடுத்தபோது எனக்குச் சிகிச்சை அளித்து என்னை மீண்டும் ஆடவைத்ததற்காக வாரியத்துக்கு நான் நன்றி கூறாமல் இருக்க முடியாது.
நன்றி மறவாத சச்சின்
24 ஆண்டுகளாக என் நெடிய, சிறப்பான பயணத்தில் என்னுடன் விளையாடியுள்ள பல மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கும் பள்ளிப்பருவத்தில் நான் பிரமிப்புடன் பார்த்து வளர்ந்த மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள். இங்கு இத்தருணத்தில் வந்திருக்கும் சௌரவ் (கங்குலி), ராகுல் (திராவிட்) மற்றும் (வி.வி.எஸ்.) லட்சுமண் ஆகியோருக்கும் இங்கு வர முடியாத அனில் கும்பிளேவுக்கும் நன்றி. அவர்களனைவரும் என் இன்னொரு குடும்பத்தாரைப் போன்றவர்கள். அவர்களுடனும் இன்று வெற்றி பெற்ற அணித் தோழர்களுடனும் இனி பெவிலியனில் பேசிக் களிக்க முடியாது என்பதை நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது. நாட்டுக்காக விளையாடும் அனைத்து அணித் தோழர்களும் நாங்களும் மிகவும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள்தானே!
இந்தத் தலைமுறை வீரர்கள் நாட்டுக்கு வருங்காலத்தில் நல்ல முறையில் சேவையைத் தொடர்வார்கள் என்பதில் எனக்கு ஐயமேதும் இல்லை. நன்கு விளையாடி, உங்களது திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தி நாட்டுக்கு நல்ல பெயர் வாங்கித் தர உங்களனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
என்னை நன்கு கவனித்துக் கொண்ட மருத்துவர்கள், உடற்பயிற்சியாளர்கள், உடல் சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி கூறாவிட்டால் மாபெரும் தவறிழைத்தவனாவேன். ஒவ்வொரு முறை எனக்குப் பிரச்சினை ஏற்படும்போதும் எனக்கு உதவி புரிந்து மீண்டும் மீண்டும் என்னைக் கிரிக்கெட் ஆட வைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
என் விவகாரங்களை நிர்வகித்த மறைந்த மார்க் மாஸ்கரேனஸுக்கும் என் தற்போதைய ஏஜெண்டுகளாகிய டபிள்யூ.எஸ்.ஜி. நிறுவனத்துக்கும் என் நன்றி. கடந்த 14 ஆண்டுகளாக என்னுடன் மேனேஜராகப் பணிபுரியும் வினோத் நாயுடுவுக்கும் பலமுறை வீட்டை விட்டு அவர் என்னுடன் இருந்தாலும் எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவரது குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி.
பள்ளி நாட்களிலிருந்து இன்று வரை தொடர்ந்து துணை நிற்கும் ஊடக நண்பர்களுக்கும் பிறருக்கும் நன்றி. அவர்களது விமர்சனங்கள் ஆக்கபூர்வமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்; நான் ரன் அடிக்காவிட்டாலும் 100 ரன் அடித்தாலும் எப்போதும் எனக்கு ஆதரவளித்துவரும் ரசிகர்களுக்கு என் மனத்தின் அடித்தளத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காக உண்ணாவிரதம் இருந்த ரசிகர்களுக்கும், பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நன்றி; அவர்களது ஆதரவின்றி நான் இத்தனை தூரம் பயணித்திருக்க முடியாது. காலம் வெகு சீக்கிரம் உருண்டோடி விட்டது; ஆயினும் உங்களுடன் நான் செலவழித்த நேரங்கள் குறித்த நினைவுகள் என்றுமே, எப்போதுமே என் மனத்தை விட்டு அகலாது. “சச்சின், சச்சின்” என்று நீங்கள் எழுப்பிய கோஷம் இறுதிவரை என் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நன்றி.
நான் எதையாவது, யாரையாவது பற்றிச் சொல்ல மறந்திருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். குட் பை.


சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு-
















































விளையாட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மன்மோகன்சிங் பரிந்துரை செய்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனை பரிசீலனை செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக இன்று அறிவித்தார். ஓய்வு பெற்ற நாளிலேயே சச்சினுக்கு இந்த விருது அறிவிப்பு வெளியானது குறிப்படத்தக்கது. ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர் கண்ணீருடன் பேசினார். அவர் கூறியதாவது:–


1999–ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தார். இந்த நேரத்தில் அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய ஏக்கமாக இருக்கிறது. நான் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு தந்தையே காரணம். அவர் தற்போது இல்லாதது எனக்கு வருத்தமாக உள்ளது. அடுத்தது எனது தாய். அவரும் எனது ஆரோக்கியம், முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்தார்.

அஞ்சலியை திருமணம் செய்து கொண்டது எனது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான விஷயமாகும். எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முன்னாள், இன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வாறு தெண்டுல்கர் உருக்கமாக பேசினார்.
கிரிக்கெட் உலகின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். டெஸ்டில் ஆடி வந்த அவர் தனது 200–வது டெஸ்டோடு ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தார்.

அவரது 200–வது மற்றும் கடைசி போட்டி சொந்த மைதானமான மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. தனது கடைசி டெஸ்டில் அவர் மிகவும் அபாரமாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 118 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்தார்.

இன்றைய ஆட்டத்தில் கேப்டன் டோனி அவரை பந்துவீச அழைத்தார். ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு இடையே தெண்டுல்கர் 2 ஓவரை வீசினார். அவரது கடைசி பந்துவீச்சு என்பதால் அனைவருமே பாராட்டினர்.

இந்திய அணி வெற்றியை பெற்றதும் அவர் ஸ்டம்பை கையில் எடுத்து வெற்றியை பகிர்ந்தார். இந்திய வீரர்கள், வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் அனைவரும் தெண்டுல்கரை கட்டி தழுவி பாராட்டினார்கள்.

அவர் மைதானத்தை சுற்றி வலம் வந்தார். ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரசிகர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். மைதானத்தை விட்டு வெளியே வரும் போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

அதை தொடர்ந்து தெண்டுல்கருக்கு மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜூன் பங்கேற்றனர்.

அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பாராட்டு விழாவில் தெண்டுல்கர் பேசும்போது, தனக்காக பாடுபட்ட குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், சக வீரர்கள், மு ன்னாள் வீரர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. மனைவி அஞ்சலியும், தெண்டுல்கரின் உருக்கமான பேச்சை கேட்டு அழுதார். கண்ணீருடன் விடை பெற்ற தெண்டுல்கருக்கு மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் உற்சாக ஆரவாரம் 


செய்தனர்.


மைதானத்தை சுற்றி வந்த போதும், பேச ஆரம்பித்த போது ரசிகர்களின் கரவொலி அதிகமாக இருந்தது. தங்களது அபிமான நாயகனின் ஆட்டத்தை இனி பார்க்க இயலாதே என்ற வருத்தத்தில் ஏராளமான ரசிகர்கள் கண்ணீர் விட்டனர்.

40 வயதான தெண்டுல்கர் தனது 16 வயதில் 1989–ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அவரது 24 ஆண்டு கால சகாப்தம் இன்றுடன் முடிந்தது.

கிரிக்கெட்டில் அவர் ஏராளமான உலக சாதனைகள் படைத்துள்ளார். அதனால் தான் அவரை கிரிக்கெட்டின் கடவுள், பிதாமகன், சகாப்தம் என்று அழைக்கிறோம்.

தெண்டுல்கருக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. அவரது இடத்தை நிரப்புவது கடினம் என்று சொன்னால் அது மிகையாகாது.
தெண்டுல்கர் தேசிய கொடியுடன் மைதானத்தை சுற்றி வந்தார். அவரது மனைவி, மகள், மகன் ஆகியோருடன் வீரர்களும், மைதான நிர்வாகிகளும் போலீசாரும் உடன் வந்தனர்.

அப்போது கேப்டன் டோனி, துணை கேப்டன் கோலி ஆகியோர் தெண்டுல்கரை தோளில் சுமந்து வந்தனர். இது ரசிகர்களை பரவசப்படுத்தியது. அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

ஆடு களத்தை தொட்டு வணங்கினார்

வீரர்களுடன் மைதானத்தை சுற்றி வந்த தெண்டுல்கர் பின்னர் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார். அப்போது கண்ணீர் மல்க ஆடுகளத்தை இரண்டு கைகளாலும் தொட்டு வணங்கினார்.
கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கரின் 200–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

தெண்டுல்கரின் பேட்டிங்கை காலையில் பார்க்கலாம் என்று ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு மிகச் சிறிய ஏமாற்றமே இருந்தது. ஆனாலும் மாலையிலேயே அவரது ஆட்டத்தை பார்க்க முடிந்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

காலையில் பீல்டிங் செய்வதற்காக மைதானத்திற்கு நுழைந்தபோது 32 ஆயிரம் ரசிகர்களும் எழுந்து கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் ஆல் அவுட் ஆனதுமே இந்தியா பேட்டிங் செய்தது.

பிற்பகல் 3.30 மணியளவில் தெண்டுல்கர் பேட்டிங் செய்ய களம் இறங்கியபோது வின்னை தொடும் அளவுக்கு ரசிகர்கள் உற்சாக குரல் கொடுத்தனர். சச்சின்...சிச்சின் என்று உற்சாக குரல் கொடுத்தனர். அவர் ஒவ்வொரு பந்தையும் சந்திக்கும் போது ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தனர். பவுண்டரி அடித்தபோது ரசிகர்களின் ஆரவாரத்துக்கு அளவே இல்லை. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் அவர் 73 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆடுகளத்தை விட்டு வெளியே செல்லும் போது ரசிகர்களை நோக்கி பேட்டை உயர்த்தி காட்டினார்.

இன்று 2–வது நாளில் களம் இறங்கும் போதும் ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். அவர் 50–வது ரன்னை எடுத்த போது அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல் இருந்தது.

பார்வையாளர் வரிசையில் இருந்த நடிகர் அமீர்கான் உள்பட முக்கிய வி.ஐ.பி.க்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்து தெண்டுல்கரை உற்சாகப்படுத்தினர்.